10 July, 2009

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 6

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 6

நேசகுமார்


அடிமை முறை பற்றிய வஹ்ஹாபியின் கட்டுரை/விளக்கம் எனக்கு அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ ஏற்படுத்தவில்லை. ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல, மதவெறியர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் என்று ஒற்றை வரியில் உதாசீனப்படுத்திவிட்டு போய்விடவும் முடியவில்லை. வஹ்ஹாபிக்கு தனியே பதில் எழுதுகிறேன். ஆனால், பதிலையும், விவாதத்தையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது. அதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

வஹ்ஹாபி மட்டுமல்ல, இஸ்லாமிய சமூகத்தில் பெரும்பாலோனர் இப்படித்தான் இருக்கிறார்கள். நாகூர் ரூமி அவர்கள் கல்லால் அடிப்பதைப் பற்றி சொல்லும்போது, இசை பற்றிய தனது கருத்தை சொல்லும்போது, "மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று சொல்வதற்குப் பின்னால் ஒரு பெரிய மத உளவியல் இருக்கிறது. அதாவது, இப்படி 'முஹமது சொல்லியிருக்கிறார் என்று ஆதாரபூர்வமாக சொன்னால், நான் உடனடியாக இந்த நிலையிலிருந்து இறங்கிவந்து கல்லால் அடிப்பது சரிதான், இசை ஹராம் தான் என்று ஒப்புக்கொள்வேன்' என்பது அதன் அர்த்தம்.

இஸ்லாமிய சமூகத்தில் திடீரென்று வன்முறை கிளம்பியிருப்பது இதனால்தான். அமைதியாய் இருந்து, அரபியே தெரியாமல், நாட்டார் இஸ்லாத்தை, பண்பட்ட - மாறிவிட்ட கலாச்சார முறையை பின்பற்றி அன்பாக, இனியவர்களாக இருந்த நமது இஸ்லாமியர்கள் திடீரென்று மாறியது இதனால்தான். திடீரென்று தமது மூலத்தை படித்த இளைய தலைமுறை, அடிப்படைகள் வேறுமாதிரி இருப்பதையும், அதுதான் ஆதாரபூர்வமானது என்பதையும் அறிந்த பிறகு, இத்தனை நாட்கள் அடைந்த முன்னேற்றத்தை, சமாதானத்தை, மத நல்லிணக்கத்தை மூட்டை கட்டிவிட்டு ஜிகாதிய பாதைக்கு திரும்பிவிட்டது.

***

லோஷன் என்ற ஈழத்தமிழ் பதிவரின் பதிவில் ஒரு Triump என்ற பெயரில் எழுதும் ஈழப்பெண் ஒருவர் தனக்குத் தெரிந்த இஸ்லாமியரைப் பற்றி எழுதியிருக்கிறார். இங்கே இருப்பவர்களில் பலருக்கு அங்கே போய் படிக்க முடியாவிட்டால், அந்த அற்புதமான எழுத்தை தவற விட்டுவிடலாம் என்பதால், அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

//எனக்கு இஸ்லாம் பற்றி முதலில் தெரிய வந்தது வாப்பா தாத்தாவால் தான். அவரின் பெயர் மிகவும் நீளமானது.. எனது பெற்றோரும் அவரை வாப்பா என்டு அவரின் பிள்ளைகள் போல் கூப்பிட நாங்களும் வாப்பா தாத்தா என்டு தான் கூப்பிடுவம். அவர் எனக்கு காட்டிய‌ இஸ்லாம் வேறு.. நான் இங்கு யுனியில் பார்க்கும் இஸ்லாம் வேறு.

வாப்பா தாத்தா, தன் வீட்டுப் பெண்களிடம், உங்களுக்கு பிடித்தால் ஹிஜ்சாப் அணியுங்கள் என்று சொல்லி இருந்தார். அவரின் மனைவி அணிவார். மகள்கள் அணிவதில்லை. அவர்களுக்கு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்ய அனுமதி இருந்தது. ஆனால் அவர்கள் விரும்பியது இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாமா (அவர்களை அப்படி தான் அழைப்பேன். வேறு அர்த்தமில்லை) ஆட்களைத்தான். ஒன்றே ஒன்று தான் வாப்பா தாத்தா அந்த மாமாக்களிடம் கேட்டார். பெண்களை சக மனிதர்களாக மதிக்கும் படி.. அவரின் நல்ல மனதிற்கு வீட்டிற்கு வந்த மாமாக்களும் நல்லவர்கள்..

..........................

எனக்கு கடவுள் இருக்கா இல்லையா என்ட ஆராச்சியில் விருப்பமில்லை.. கடவுள் இருந்தால், அவர் பாத்துக்கொள்ளுவார் என்டு சோம்பி இருக்கவும் இஷ்டமில்லை.. இல்லாவிடடால், நானே கடவுள் என்டு மதம் பிடித்து அலையவும் இஷ்டமில்லை..

மனிதனாக வாழவே விருப்புகிறேன்.. மோட்சமோ நரகமோ எதுவாயினும் எனக்கு சரி... எங்கும் வாழ முடியும் என்ட நம்பிக்கை இருந்தால் போதும்.... அது தலைக்கனமில்லை.. தன்னம்பிக்கை :)//

(பதிவில் எதிர்வினை ஆற்றியவருக்கு திண்ணையில் பிரசுரம் செய்வது உடன்பாடா என்று தெரியாத நிலையில், முழுப் பதிவை இங்கே வெளியிட இயலவில்லை. இதன் பதிவு முகவரி கீழே தரப் பட்டுள்ளது - திண்ணை குழு)

லோஷனின் பதிவு: http://loshan-loshan.blogspot.com/2009/05/blog-post_12.html

ட்ரியம்பின் பதிவு: http://the-nutty-s.blogspot.com

***

ட்ரியம்ப் சொல்லியிருப்பது போன்றவொரு இஸ்லாமிய வாப்பாவை, காக்காவை, அண்ணனை, மாமனை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம். எனக்கு ஒரு நண்பர் இருந்தார். எனக்கு அப்போது இளம் வயது, அவருக்கு எழுபது வயதிருக்கும் என்னைவிட பல பத்தாண்டுகள் மூத்தவர். ஆயினும் வயது வித்தியாசத்தை மீறி, நண்பராக - இனிய நண்பராக இருந்தார். வீட்டு முற்றத்தில் வந்து உட்கார்ந்து கொள்வார். நல்ல உயரம், அரேபிய சாயல் தெரியும் தோற்றம். முழங்காலுக்கு மேலே லுங்கியும், மேலே வெள்ளை நிறத்தில் நீள அங்கியும் அணிந்திருப்பார். மாலைப் பொழுதுகளில் சித்தர் பாடல்களை வெள்ளி பொடி டப்பாவிலிருந்து அவர் போட்டுக்கொண்டே பாட நான் கேட்டிருந்த காலங்கள் உண்டு. ஆண்டுகள் பல கழிந்துவிட்ட நிலையில் இப்போது அதே ஊரில், அதே பகுதியில் இப்படிப்பட்ட பெரியவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இருந்தாலும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். இதற்குக் காரணம் வஹ்ஹாபியின் இந்த மனோபாவம்தான். இதுதான் முஹம்மது சொன்னது, இப்படித்தான் அவர் நடந்து கொண்டார் என்று ஹதீதுகளை, குரான் வசனங்களை, அவற்றிற்கான இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களை காட்டிவிட்டால் போதும், உடனடியாக அதை நியாயம் என்று வாதிடத் துவங்கிவிடுகிறார்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள். எனது ஒரு தோழி, வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண், வஹ்ஹாபி பாணியில் சரிதான் என்று சில வருடங்களுக்கு முன்பு ஆவேசமாக வாதிட்டார்.முதலில் பர்தா அணியாததை சுட்டிக்காட்டி பர்தா அணிந்து கொண்டு மூலையில் இருப்பதுதானே என்றேன். ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து இன்றைய தேதியில் இப்படி நான் இருந்தால் தான் ஒரு நல்ல வாழ்க்கை துணையை ஈர்க்க முடியும், தேர்வு செய்ய முடியும் என்றார். அடுத்த படியாக, "நீங்கள் வேறு நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்பதற்காக உங்களை ஒரு இந்து மத சாமியார் வன்புணர்ந்து அடிமையாக பிடித்துச் சென்றால் என்ன சொல்வீர்கள், அது போர் தர்மம் என்று சொல்வீர்களா? 1400 வருடங்களுக்கு முன்பாக இதைவிட ஐரோப்பாவின் பார்பாரியன்கள் மோசமாக நடந்துகொண்டார்கள், இது பரவாயில்லை அல்லது மங்கோலியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படியே தமது கடவுள் தமக்கு ஆணையிட்டதாகக் கருதி செய்தார்கள் என்று சமாதானம் சொல்வீர்களா" என்றேன். அப்பெண் அதற்கப்புறம் என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். மனதிற்குள் திட்டியிருக்கவும் கூடும். பல மாதங்கள் கழித்து ஒரு நாள் என்னிடம் வந்து நீங்கள் சொல்வதில் சில சரிதான், ஆனால் இஸ்லாம் ஏன் இப்படி சொல்லியிருக்கிறது என்பதற்கான காரணம் எனக்கு புரியவில்லை அல்லது இஸ்லாத்தைப் பற்றி சொல்லியவர்கள் தவறாக சொல்லியிருக்கலாம் என்று சொல்லி, இந்து மதத்தை திட்ட ஆரம்பித்து விட்டார். திட்டுங்கள் என்று அமைதியாக இருந்துவிட்டு பின்பு ஹமீது ஜாஃபரிடமும், வஹ்ஹாபியிடமும் இப்போது சொல்வதையே அப்போதும் சொன்னேன், "மற்ற மதம் தவறு என்பதால் உங்களது நம்பிக்கைகள் சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று. ஆனாலும், அவர் இன்றுவரை மாறவில்லை. நல்லவெளையாக நட்பு உடைந்து போகவில்லை. மனதிற்குள் என்னைப் பற்றி என்ன உண்மையிலேயே எண்ணுகிறார் என்பது இன்றும் புரியவில்லை. எப்படியோ, எனது மனதிற்கு பட்டதை பகிர்ந்து கொண்ட திருப்தி எனக்கு. இப்போது திண்ணையில் எழுதுவதும் அதனால் தான். இதனால், பணமில்லை, புகழில்லை, அதிகாரமில்லை, சுவர்க்கம் கிட்டும் என்ற தூண்டுதல் இல்லை. ஆனால், வாழ்க்கை வாழ்வதில் எதோ பயனுள்ள ஒன்றை செய்கிறோம். வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இருக்கும் நிலையில், சமூகத்திற்கு பகரமாக இந்த சிறு விவாத்தை கூட தூண்டவில்லை என்றால் எப்படி என்ற எண்ணம்தான் காரணம்.

***

இந்த இறையியலை, மத உளவியலை இஸ்லாத்தில் மட்டுமல்ல, இந்து மதத்திலும் பார்க்கலாம். மற்றபடி சிறந்த ஆன்மீகவாதியான, தீர்க்கமான ஞானமுள்ளவராக இருந்த மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள், பாரம்பரியம் - இதுதான் ஆதி சங்கரர் சொன்னது என்பதற்காக பிறப்பின் அடிப்படையிலான வர்ண முறையை நியாயப்படுத்தி பேசியிருப்பதை பார்க்கலாம். பால் பிரண்டனுக்கு ரமணரை காட்டியவர், அவரிடம் சென்று அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள் என்று சொன்னவர், அவரை மறுப்பதற்கு மடத்தின் பொறுப்பு தடையாயிருக்கிறது என்றவர் எப்படி குலத்தொழில் முறையை நியாயப்படுத்த முடியும், எப்படி ஜாதிப்பாகுபாடு சமுதாய அமைதிக்கு வழிகோலும், அதுவே இந்து மதத்தை காக்கும் என்று கருத முடியும் என்ற உறுத்தல் எனக்கு உண்டு. அவரது தெய்வத்தின் குரலில் ஆங்காங்கே தென்படும் பல வரிகள் மனதில் பெரும் சஞ்சலத்தை உருவாக்குகிறது. அதே போன்று, அவர் அப்படி சொன்னார் என்பதற்காக இன்று பல நல்ல நண்பர்களும் நியாயப்படுத்தி பேசுகின்றார்கள். இதற்கும் இஸ்லாமிய மனோபாவத்திற்கும் டிகிரி/படிநிலையில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், அடிப்படை மனோபாவம் ஒன்றுதான். முன்னோர் வெட்டிய கிணறு என்பதால் உப்புத்தண்ணீரும் அமிர்தமாகிவிடுகிறது. பகுத்தறிவு, சுய சிந்தனை, மனிதாபிமானம், மனச்சாட்சி எல்லாம் விடை பெற்றுக் கொள்கிறது.

இஸ்லாமிய மனோபாவத்தை நான் விமர்சிக்கும்போது என்னை ஆதரிக்கும், பாராட்டும் பல நண்பர்களுக்கு நான் இப்படி திரும்பி நமது முதுகைப் பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது அரசியலோ என்ற சந்தேகத்தோடு பார்க்கிறார்கள் அல்லது எனக்கு ஜாதிக்காழ்ப்பிருக்கிறது என்ற நெருடலோடு என்னோடு தர்க்கிக்காமல் நகர்ந்து விடுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை நெருங்கிப் பார்க்கும்போது நமது பழைய காலம் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

***

இந்த மாத Periyar Era வை படித்துக் கொண்டிருந்தேன். திரு.வே.ஆனைமுத்து அவர்கள் பதிப்பிக்கும் இதழ் இது. இதில் மனுநீதியிலிருந்து பெரியார் ஈவேரா மேற்கோளிட்டுக் காட்டியதாக சில வசனங்களை கண்டேன். திம்மியாக இருக்காத சூத்திரர்களின் சொத்துகளை கொள்ளையிடலாம் என்ற வசனங்கள் அவை. இதற்கும் முஹமது/அல்லாஹ் அனுமதித்த கனீமா என்ற கருத்தியலுக்கும் வித்தியாசம் இல்லை. 'ஜிஸ்யா கொடுத்து, அடிபணிந்து இழிவான வாழ்வு வாழ்ந்தால் உனது உயிருக்கு, கற்புக்கு, உடமைகளுக்கு உத்திரவாதம் ,இல்லையேல் உனக்கு அழிவுதான்' என்று சொல்லும் இஸ்லாமிய ஆன்மீக கருத்தாக்கமே இங்கும் எதோ ஒரு வகையில் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. நபித்துவம் உலகெங்கும் இருந்த ஒன்று என்று இஸ்லாமியர்கள் நம்புவது, வெறும் நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் கூட என்று தோன்றுகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு காலகட்டத்தில் மதம் வன்முறையால் உருவாகி, ஆசைகளை தூண்டிவிட்டு அதன் மூலம் பெரும் நிலப்பரப்பில் பரவி இருக்கின்றது. இன்று அது இங்கே ஏற்கப்படவில்லை, பழம் சரித்திரமாக ஒதுக்கப்பட்டு விட்டது. இஸ்லாத்தில் நிதர்சனமாக இருக்கிறது. தாலிபான், தூய்மையான இஸ்லாம் ஓங்கியுள்ள பாகிஸ்தானில் அதனால் தான் ஜிஸ்யா கொடுக்காத சீக்கியர்களை தாக்குகிறார்கள், இந்துக்களை துன்புறுத்துகின்றார்கள்.

சோழ மன்னன் வைணவக்கோவில்களை இடித்ததற்கும், வஹ்ஹாபி நியாயப்படுத்தும் அடிமை முறை பற்றிய கருத்தியலுக்கும் இருக்கும் தொடர்பு அல்லது தொடர்பற்ற தன்மை இதுதான். இன்று, இந்து சமுதாயத்தில் அல்லது கிறிஸ்துவ சமுதாயத்தில் மதத்தில் இப்படி சொல்லியிருக்கிறது என்பதற்காக அதை நியாயப்படுத்த முனைவதில்லை. அல்லது அப்படி முனைபவர்கள் சிறுபான்மையினராக பார்க்கப்படுகின்றனர். ஜாதி முறை, குலதர்மம், குலத்தொழில் பற்றிய சந்திரசேகர சரஸ்வதியின் கருத்துக்களை அவர் வாழ்ந்த காலத்திலேயே பிராம்மண சமூகம் கூட ஏற்கவில்லை. மேலுக்கு அவரை புகழ்ந்தார்கள், பொன்னபிஷேகம் செய்தார்கள், ஆனால் மறுநாள் காலை எழுந்து தத்தமது சூத்திர, வைசிய, க்ஷத்திரிய தர்மங்களை சிரமேற்கொண்டு செய்தார்கள். ச.சே.சரஸ்வதிக்கு மாலைபோட்டு மரியாதை செய்து ஆனால், வாழ்க்கையின் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்தார்கள் பிராம்மணர்கள். மற்ற சமூகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். தூர இருந்து பெரும் கும்பிடு போட்டு தத்தமது கருத்துக்களையும், நாகரிக முன்னேற்றங்களையும் பின்பற்றி சென்று கொண்டே இருந்தார்கள்.

***

ஆனால், இங்கோ ஒரு பெரும் சமூகமே பின்னால் சென்று கொண்டிருக்கிறது. பன்மைத்தன்மையின் அழிவு வெளிப்படையாக தென்படும் தாலிபான் புர்காக்களில் தென்படுகிறது. ஊருக்கு ஒரு அரபி மதராஸா தென்படுகிறது. எங்கு முஸ்லீம் வீடுகள் தென்பட்டாலும் அங்கே தமுமுகவின் சுவர் வாசகக்கள் தென்படுகின்றன, தினமலரை திட்டி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை காணமுடிகிறது. மேலப்பாளையத்தில் கற்பு தவறியதாகக் கருதிய இஸ்லாமியப் பெண்ணை, ஆப்கானிஸ்தான் பாணியில் கல்லால் அடிக்கின்றனர் மதத்தை கற்ற இளைய இஸ்லாமியர். சின்னப்பா, செல்லப்பா, தம்பி, செல்லவாப்பா எல்லாம் அரபி பாணியில் அபூ, இப்னு என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். அரபி மோகம் என்பது ஆன்மீகத்திலிருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது இன்றைய இந்திய இஸ்லாமிய சமூகத்தில். அரபு நாடுகளோ வன்முறையை நம்மைப் போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டு அங்கே ஒரு சிறு பொறி தென்பட்டால் கூட உடனடியாக அடக்கி, முளையிலேயே கிள்ளிவிடுகின்றன. அவர்களின் வீச்சை அதிகரிக்க வரும் அபரிமிதமான வருமானத்தில் ஒரு சிறு பகுதியை இந்தியா போன்ற நாடுகளின் இஸ்லாமிய சமூகங்களை நோக்கி வீசி, பெரும் ஏவல் படையை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.

ஒரு பெரும் சுழலில் இஸ்லாமிய சமூகம் செல்கிறது. விண்ணிலிருக்கும் கறுப்பு ஓட்டைகள் (Black Holes) சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் இழுக்க முற்படுவதுபோல, இந்த இஸ்லாமிய சுழல் அந்த சமூகத்தை மட்டுமல்ல நம்மையும் இழுத்துச் செல்ல முற்படுகிறது. இது எங்கு போய் முடியும் என்பதும், இதற்கு நமது சமுதாயம் என்ன தீர்வு வைத்திருக்கிறது என்பதும் புரியவில்லை. இதோ பக்கத்தில் இருக்கும் ஈழத்தில் நடைபெற்றுள்ளதுபோல ஒரு பெரிய ஹோலோகாஸ்டை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோமா, உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய சமூகம் நம்மிடையே இருக்கும் நிலையில் சிறு சிறு அளவிலேயே இருக்கும் பிரித்தன், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்றவை சமாளிக்க முடியாமல் திணறும்போது, பக்கத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளே இதனுடன் பெரும் சமர் செய்து திணறும்போது, நாம் என்ன செய்யப்போகிறோம், இந்த அளவுக்கு அடிப்படைவாதத்தால் கவரப்படும் இளைஞர் கூட்டத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் நாமும் ஒரு இலங்கையைப் போல, ஆப்கானிஸ்தானைப் போல, பாகிஸ்தானின் பெரும்பகுதியைப் போல அமைதியான வாழ்க்கையை தொலைத்துவிட்டு அடிப்படைவாதிகளுடன் தினம்தோறும் சமரையும், அழிவையும் சந்திக்கப் போகிறோமா என்று தெரியவில்லை.


http://nesamudan.blogspot.com

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20906183&format=html

Thinnai.com 19th June,2009

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 7

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 7

நேசகுமார்


சகோதரர் வஹ்ஹாபி அவர்களுக்கு, நண்பர் வெங்கட் சாமிநாதன் அளித்திருந்த விளக்கங்களை கண்டேன். மிகவும் அழகாக, அவருக்கே உரிய nostalgical நடையில் எழுதியுள்ளார். இதை தமிழில் எப்படி சொல்வது என்று சரியாகத் தெரியவில்லை. இனிய பழங்கனவு நடை என்று சொல்லலாமென்று நினைக்கிறேன். (அப்படி சொன்னால், அது ஆங்கில வார்த்தையை படிக்கும்போது எளிதாக புரிந்து கொள்வது போல புரிந்து கொள்ளப்படுமா என்பது தெரியாததால், இரண்டையும் எழுதுகிறேன் ).

மிகவும் அழகாக, நான் பல கட்டுரைகளில் திரும்பத் திரும்ப சொல்லும் விஷயத்தை வெ.சாவும் சொல்கிறார்:

//ஒரு காலத்தில் சதி, உடன் கட்டை ஏறுதல் எல்லாம் ஹிந்து சமுதாயத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இருந்தன தான். அப்போதும் அக்கொடுமைகளுக்கெல்லாம் சாஸ்திர நியாயம் சொன்னார்கள். இக்கொடுமைகளை எதிர்த்தவர்களை ஹிந்து விரோதிகள் என, மிலேச்சர்கள் என குற்றம் சாட்டினர். எந்த சாஸ்திரத்தில் எழுதியிருக்கிறது? என்று ராஜா ராம் மோஹன் ராய் கேட்டார். பதில் இல்லை. அது ஒரு கால கட்டம். அதைத் தாண்டி ஹிந்து சமுதாயம் வந்து விட்டது. யூத கிறித்துவ சமுதாயம் பெண்ணுக்கு கல்லெறிந்து சாவு என்று தண்டனை என்று கட்டத்தைத் தாண்டி வந்துவிட்டது போல. இன்று இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் மத, சாஸ்திர நியாயம் சொன்னால் சிரிப்பார்கள்.//

***

இதுதான் ஏனைய சமுதாயங்களுக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். மற்றவர்கள் மதத்திலிருந்து, ஜாதியிலிருந்து, குல வழக்கங்களிலிருந்து, பாரம்பரியம் என்ற பெயரில் நிகழ்ந்தவைகளிலிருந்து தம்மை விலக்கி, தள்ளி நின்று பார்க்கிறார்கள். நாகரிகத்தை, முன்னேற்றத்தை, புதிய சமுதாய வழக்குகளை எடைபோட்டு ஏற்கத்தோன்றினால் ஏற்கின்றார்கள். நிராகரிக்க வேண்டும் என்று அவரவர் மனதிற்கு தோன்றினால் நிராகரித்து முன்னேறுகிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய சமுதாயம் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த காலத்தை பொற்காலமாக கணிக்கிறது. அப்போது நிகழ்ந்தவை சரிதான், நியாயமானதுதான் என்று வாதிடுகிறது. அக்காலத்தை மீண்டும் இன்று கொண்டுவர முயல்கிறது.

தாலிபான், அடிப்படைவாத இஸ்லாம் மீட்சி பெறும் பாகிஸ்தானியப் பகுதிகளில் இருக்கும் நிலவரம் பற்றிய பிபிசி குறும்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சிறு பெண் நான்காம் வகுப்புக்கு மேலே பெண்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது என்று தாலிபான் மதக்கட்டளை பிறப்பித்திருப்பதாக (ஃபத்வா) சொன்னது. அதைப் பற்றி அந்த விவரணப்படத்தில் விரிவாக சொல்லவில்லை. ஆனால், பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அதன் அடிப்படை விளங்கியது. அது இதுதான் - முஹம்மதுவின் இளம் மனைவி ஆயிஷாவோடு அவர் வாழ்க்கை நடத்தத் துவங்கியது ஆயிஷாவின் ஒன்பதாவது வயதில் என்ற ஒரு கருத்து இஸ்லாமிய அறிஞர்களிடையே/முல்லாக்களிடையே உண்டு. ஆறு வயது, ஏழு வயது என்றெல்லாம் கருத்து இருந்தாலும், அதிகபட்சம் அதை நீட்டிக்க ஏதுவாக இருக்கும் ஹதீது இந்த ஒன்பது வயதில் இல்லற வாழ்க்கை துவங்கியது என்ற ஹதீதுதான். எனவே இதை தாலிபான்கள் பிடித்துக்கொண்டு ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்தால், ஒன்பது வயதாகும்போது நான்காம் வகுப்பிற்கு ஒரு பெண் குழந்தை வரும். ஆகவே, ஒன்பது வயதில் ஒரு பெண்(குழந்தை) இல்லற வாழ்க்கையில் ஈடுபட குறைந்த வயது என்பது கடவுளின் கட்டளை, அதனால் ஒன்பது வயதிற்கு மேலும் ஒரு பெண்(குழந்தை) ஆண்களை பார்த்தால், பேசினால் அது பாலியல் சீர்கேட்டிற்கு வழிகோலும், கடவுள் அதைக் கண்டு கோபப்படுவார், எனவே தாம் கடவுளின் வழிகாட்டுதலை, சத்திய மார்க்கத்தை, நேர் வழியை, மெய் வழியை உலகில் நிலைநாட்ட வேண்டுமென்றால், நான்காவது வகுப்பிற்கு மேல் இருக்கும் பெண்களின் கல்விநிலையங்களை எல்லாம் குண்டு வைத்து தகர்க்க வேண்டும், எரித்துவிட வேண்டும், அது மெக்காவுக்கு மேலே ஏழு வானங்களுக்கு அப்பால் அர்ஷில் அமர்ந்து உலகத்தை கண் கொத்திப்பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளின் உள்ளத்தை குளிரச்செய்து அவர் தமக்கு ஹூரிகளை, கை படாத கன்னிகளை தர ஏது செய்யும் என்று கருதியிருக்கின்றனர்.

ஆனால், இது சில மாதங்களிலேயே போய், எல்லா பெண்கள் பள்ளிக்கூடங்களையும் அவர்கள் அழிக்கும்படி ஆனது. மதவாதம் என்பது இப்படித்தான் செயல்படும். அது ஒரு முடிவில்லா கொடுஞ்சுழல். எல்லோரையும் மேலும் மேலும் கீழே கொண்டு போய்க்கொண்டே இருக்கும். அதுதான் இஸ்லாமிய அடிப்படைவாத விஷயத்தில் நிகழ்கிறது. முதலில் கேரளாவில் இஸ்லாமியப் பெண்கள் சுதந்திரமாக உடையணிந்துவந்தார்கள். பின்பு, அந்நிய ஆடவர்கள் வந்தால் பேருக்கு தலையில் துணியை இழுத்துவிட்டுக் கொள்வார்கள். அதன் பின்னர் முழு உடலை மறைக்கும் படி துணியை சுற்றிக்கொண்டார்கள்(இப்போதும் கேரளாவில் செட்டிலான பல தமிழ் இராவுத்தர் வீட்டு பெண்கள் இதைக் கடைப்பிடிக்கின்றனர், மதத்தின் பல அங்கங்களிலும் அங்கே இது நீள்கிறது. இது போன்ற விஷயங்கள் காரணமாகவே மாப்ளாக்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மலையாள முஸ்லீம்களை தாழ்வாகப் பார்ப்பதும் உண்டு). பின்பு புர்கா வந்தது. இப்போது தாலிபான் புர்காக்களை எங்கும் பார்க்க முடிகிறது. அடுத்ததாக, முழுவதும் மூடியிருந்தாலும், சவுதியில் இருப்பது போல ஆண் துணையின்றி தனியாக முஸ்லீம் பெண்கள் வரக்கூடாது என்ற மதக்கட்டளை கூட வரலாம்.

***

இங்கே ஒரு முக்கியமான, ஆனால், இந்த திண்ணை விவாதங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை குறிப்பிட வேண்டும். வெங்கட் சாமிநாதன் என்ற பிறப்பால் பிராம்மண ஜாதியைச் சேர்ந்தவர்கள் தற்போது மதச்சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் துறப்பதையும் நிந்திப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால், தமிழ் சமுதாயத்தில் பிராம்மண வெறுப்பு என்பது எப்போதோ நிகழ்ந்த நிகழ்வுகளை, எப்போதோ நிலவிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட குழுவை குற்றம் சாட்டுவதிலும், நிந்திப்பதிலும், இகழ்வதிலும், வெறுப்பை பரப்புவதிலுமே இருக்கின்றது.

அதே விஷயங்களை இன்று செய்யும், அதைவிட வன்மையாக செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எந்த திராவிட இயக்கத்தவரும் கண்டிப்பதில்லை, நிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன், அப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வது கூட இல்லை.

***

பிராம்மண வெறுப்பு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆபிரகாமிய கருத்தியல். ஆபிரகாமிய மதங்களில் எப்போதும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். அவை தன்னையொத்த கருத்தியல்களையே உடனடியாக அழிக்கப்பட வேண்டியவையாக கருதும். உதாரணமாக, பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் இந்துக்களை விட அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் அதிகம் வெறுப்பது அஹமதியா முஸ்லீம்களை.

உலக அளவில் எடுத்துக் கொண்டால், சிலை வழிபாடு செய்யும் இந்துக்களை விட அதிகம் வெறுப்பு பரப்பப் படுவது யூதர்களுக்கு எதிராகத்தான். இத்தனைக்கும் யூதர்கள் ஏகத்துவத்தை ஏற்பவர்கள், அந்தக் கோட்பாடு புறப்பட்டதே யூதர்களிடமிருந்துதான். ஜிஹாத், பிராம்மண வெறுப்பு ஆகியவற்றின் ஆதிமூலம் யூத சமுதாயம் தான்.

ஆபிரகாமியக் கருத்தியலை ஒத்ததுதான் பிராம்மணீயம். இங்கே நான் இதைக் குறிப்பிடும்போது ஒரு விளக்கத்தை அளிக்க வேண்டும். திராவிட இயக்கம் பிராம்மணீயத்தை நிந்திப்பதாக சொல்லி பிராம்மணர்களை நிந்தித்தது. ஆனால், நான் பிராம்மணீயத்தை நிந்திக்கவும் இல்லை, அதனுடன் பிராம்மண ஜாதியில் வந்தவர்களை சேர்த்துப்பார்த்து நிந்திக்கவும் இல்லை. பிராம்மண வெறுப்பை நிந்திக்கும்போது, அதனுடன் சேர்த்து பிராம்மணீயத்தை ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ விரும்பவில்லை. இதே விஷயம் இஸ்லாத்துக்கும் பொருந்தும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விமர்சிப்பது வேறு, இஸ்லாமியர்களை வெறுப்பது வேறு. இந்த வித்தியாசத்தை நான் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன். அதனால் தான் எனது எழுத்துக்களில், பேச்சில், வாதங்களில் எப்போதும் அடிப்படைவாத இஸ்லாத்தை குறிப்பிடுகிறேன் அல்லது பொதுவான இஸ்லாமியர்களிடமிருந்து அடிப்படைவாதிகளை பிரித்துக்காண்பதற்கு இஸ்லாமிஸ்டுகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறேன். தனிப்பட்ட முறையில் நான் மிகவும் அன்பு செலுத்தும், நட்பு பாராட்டும் இஸ்லாமிய நண்பர்கள், தோழிகள் உள்ளனர்.

***

ஆபிரகாமியத்துக்கு தனது இனம் இந்த பிராம்மண இனவாதம் - பிராம்மணீயம் என்பது அடியாழத்தில் புரிந்திருக்கிறது என்றே கருதுகிறேன். அதனால் தான் அது இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் தனது பிரதான எதிரியாக பிராம்மணர்களைக் கண்டது. யூத எழுச்சியிலும், கிறிஸ்துவ பரவலிலும் இதை காணலாம். முதலில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டது பாகன்களிடையே இருந்த பிராம்மண(அதாவது இந்திய பிராம்மண ஜாதிகளைப் போன்ற) ஜாதியினர்தான்.

இதைப் புரியாமலேயே மூளைச்சலவை செய்து ஏற்றோம் நாம். விளைவு, அப்பட்டமான வெறுப்பு பிராம்மணர்கள் மீது பரப்பப் பட்டது. இதன் வீச்சு இல்லாத பிராம்மணரல்லாதோரை நான் கண்டதில்லை. நான் உட்பட அவ்வப்போது இதற்கு பலியானதும் உண்டு. ஒரு பெரிய மீம் ஆக, சிந்திக்காமல் நாம் உணர்வு நிலையில் இருந்து செயல்படும் கருத்தியலாக இந்த பிராம்மண வெறுப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆய்வை மேற்கொண்ட ஒரு கட்டத்தில் நான் இந்த பிராம்மண வெறுப்பு, அதன் அடிப்படைகள் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் மீதும் இஸ்லாமிய சமூகத்தினுள் நிலவுவதைக் கண்டேன். நம்மிடையே பிராம்மணர்கள் பற்றிய பிரச்சாரக்கற்பனைகள் பல உண்டு. பிராம்மணர்கள் கோழைகள் என்ற கற்பிதம் உண்டு. இது ஒரு பெரிய புரட்டு என்பதும் அதை விளக்க தனியே கட்டுரை எழுத வேண்டும் என்பதும் தனி விஷயம் என்றாலும், அதே கற்பிதம் இந்து சமுதாயம் பற்றி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுவதைக் கண்டேன். அடிபணிந்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆனார்கள், ஆயிரமாண்டுகளாக அடிபணியாதவர்களே, சுதந்திர விரும்பிகளே இந்துக்களாக இன்றும் நிற்கின்றார்கள் என்பதை எந்த இஸ்லாமியரும் கவனிப்பது கிடையாது.

அதே போல, பிராம்மணன் என்றால் சூழ்ச்சி செய்பவன் என்ற கருத்தாக்கம் நம்மிடையே உண்டு. பிராம்மணன் என்பவன் நயவஞ்சகன், எதிர்த்து போரிடாமல் முதுகில் குத்துபவன், ஒழுக்கமற்றவன், வாழ்க்கை நடத்துவதற்காக எதையும் செய்யத் தயங்காதவன் என்ற வெறுப்பியல் கருத்துகள் தமிழ் சமுதாயத்தில் திராவிட இயக்கங்களால் பரப்பப்பட்டதைப் போலவே, இந்துக்களைப் பற்றி இஸ்லாமியரிடையே அதே கருத்துக்கள், அதே வார்த்தைகள், வசவுகள் நிலவுவதைக் கண்டேன். இது ஆரம்பத்தில் பெரிய அதிர்ச்சியாகக் கூட இருந்தது.தமிழ் இஸ்லாமியர்களிடையே புழக்கத்தில் உள்ள 'மாவு' என்ற தமிழரைக் குறிக்கும் வசைச் சொல்கூட பெரும்பாலும் கோழை என்ற அர்த்தத்தில் பொதுவாக பயன்படுத்தப் படுகிறது. இப்போது வஹ்ஹாபிசம் பரவப்பரவவே எங்கும் காபிர் என்ற வார்த்தை தமிழரைக் குறிக்க பயன்படுத்தப் படுகிறது.

***

இஸ்லாமியர்களிடையே காபிர்களுக்கு எதிரான இந்த வெறுப்பியல் தங்களது வித்தியாசங்களை மறைத்துக்கொள்ளவும், அதை மீறிய ஒரு சகோதரத்துவத்தை கொண்டு வரவும் பயன்படுவதைப் போலவே, தமிழ் சமூகத்தில் நம்மிடையே உள்ள பிரச்சினைகளை, வித்தியாசங்களை மூடி மறைக்க, கண்டும் காணதது போல் மூளைச்சலவை செய்ய பிராம்மண வெறுப்பு பயன்படுகிறது.

இஸ்லாமிய சமூகத்தில் மேல் வர்க்கம் இதை தமக்கு வசதியாக பயன்படுத்திக் கொள்வதைப் போலவே, நமது இடைப்பட்ட ஜாதிகள் (intermediary castes), இந்த பிராம்மண வெறுப்பை வசதியாக பயன்படுத்திக் கொண்டன.

முதலில் இதனால் பெரும் பலன் பெற்றது வெளாள சாதிகள் தாம். திராவிட இயக்கத்தினால் பெரும் பலன் பெற்றது வெளாள சாதிகள். பின்பு எம்.ஜி.ஆரின் பிளவு, அவரின் வளர்ச்சி வெளாளருக்கு அடுத்த படிநிலையில் இருந்த சாதிகளுக்கும், பாமகவின் பரவல் வளர்ச்சி அடுத்த படிநிலையில் இருந்த சாதிகளுக்கும் (பாமக எதிர்பார்க்கவில்லை என்றால் கூட அதன் வளர்ச்சி தென் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வன்னியரல்லாத மிகவும் பிற்பட்ட சாதிகளுக்கு உதவி செய்தது) உதவியது. இப்படி இடைப்பட்ட சாதிகள் தொடர்ந்து எல்லா வசதிகளையும் பெற பிராம்மண வெறுப்பு என்ற கருத்தியல் பெருந்துணை புரிந்தது.

இதனால் அடைந்த பலன்கள் பல், வியாபாரத்தில் - அரசியலில் - நிலவுடமையில் - கல்வியில் - பதவிகளில் - அதிகாரத்தில் - வசதியில் - சமூக அந்தஸ்தில் இன்று பிற்பட்ட சாதிகளின் சொர்க்க புரியாக தமிழ்நாடு விளங்குகிறது. எனது சாதியினால் வாழ்க்கையில் எத்தனை கதவுகள் திறந்திருக்கின்றன என்று இப்போது பின்னோக்கிப் பார்க்கிறேன். இதனால், ஒடுக்கப்பட்டது பிராம்மணரிடையே பின் தங்கியிருந்தோரும், தலித்துகளிடையே பெரும்பான்மை சமுதாயமும் தான். பிராம்மணர்களிடையே இருந்த உயர்வர்க்கம், நடுத்தர வர்க்கம் ஆகியவை சமாதானப்படுத்திக்கொண்டு ஒட்டி வாழ்ந்தது அல்லது புலம் பெயர்ந்தது. தலித்துகளிடையே புத்திசாலிகள் அந்தஸ்தும், வசதியும், அதிகாரமும் பெற்று தமது சமுதாயத்திடையே ஒரு சிறு குழுவை தமக்கென உருவாக்கிக் கொண்டனர். வெளிப்படையாக இல்லையென்றாலும், மிக இயல்பாக அந்த குழுவிடம் பி.ச/மி.பி.ச ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு எல்லா வசதிகளையும் தந்து, அந்த குழுவர்க்கத்தின் செயல்பாடுகளுக்கு பாதுகாப்பளித்து ஆனால், இது ஒரு சிறு குழுவாக மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொண்டது.

***

இந்த பார்கெய்ன்/பரிவர்த்தனை மிகவும் இயல்பாக, மெதுவாக, யாரும் கவனிக்கா வண்ணம் நிகழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். எந்தவொரு தலித் பிரமுகரையும் எடுத்துக் கொண்டால் சொந்தத்தில் ஒரு எம்.எல்.ஏ, எம்.பி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், நீதிபதிகள் என்று இருப்பதைப் பார்க்கலாம். சிற்சில சமயங்களில் ஒரே குடும்பத்தில் எல்லாமே குவிந்திருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஒரு குழு உருவானது திட்டமிட்டு நிகழவில்லை என்றாலும், அப்படி உருவாகிறாற்போல் பொதுசமுதாயம் பார்த்துக் கொண்டது. இது அவர்களுடன் ஒரு எழுதப் படாத ஒப்பந்தத்திற்கும், பெரும் எண்ணிக்கையிலான தலித் சமுதாயத்தின் கவனம், கோபம் பிற்பட்ட சமுதாயத்தின் மீது திரும்பாத வகையிலும் கவனமாக பாதுகாப்பு சுவரொன்றை ஏற்படுத்தியது.

இதுவே இன்றைய இஸ்லாமிய சமூகத்திலும் நிகழ்வதைப் பார்க்கலாம். திட்டமிட்டு சவுதி, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் பரப்பப்படும் அடிப்படைவாதம், முன் வைக்கப்படும் வஹ்ஹாபிசம் அங்கே இருக்கும் ஆளும் உயர்வர்க்கத்திற்கு பேரம் பேச வசதியாக இருக்கிறது. அவர்களது நிலை தாழாமல், மற்ற இஸ்லாமியர்களை தள்ளி வைக்க, அடக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப ஏதுவாக இருக்கிறது. வழிகேடு, சீர்கேடு, தமிழ் சமுதாயத்தின் ஒழுக்கக் கேடுகள் என்று தாவா செண்டர்களின் கணினி மையங்களிலிருந்து, கொடையாக அளிக்கப்பட்ட மடிக்கணினிகளிருந்து எலக்ட்ரானின் புலம்பலை, பிரச்சாரத்தை நிகழ்த்தும் வஹ்ஹாபிகளில் எவரும் சவுதி அரச குடும்பத்தை, அரபி உயர்வர்க்கத்தை, அதன் சீர்கேடுகளை, அதன் ஒடுக்குமுறைகளை எதிர்க்க மறுப்பதை, கவனிக்க மறுப்பதை காணலாம். தமக்குள்ளாக நிலவும் பாரபட்சங்கள் இந்து சமுதாயத்தில் நிலவுவதை விட அதிகம் என்பதை காணமறுக்கிறார்கள் அவர்கள். இத்தனை நூற்றாண்டுகள் கழித்து சவுதியின் மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு கறுப்பு இமாம் நியமிக்கப் பட்டிருக்கிறார். பிலால் பற்றி கவிதை என்ற பெயரில் எதையவது கிறுக்கும் வஹ்ஹாபிகள் இத்தனை நூற்றாண்டுகாலம் நிலவிய இனவெறியை, இனவெறுப்பை கவனிப்பதும் இல்லை, கவனத்தில் கொண்டு வந்தாலும் கூட அதற்குப் பின்னால் எதையாவது இறைவனின் திட்டத்தை கண்டுபிடித்து முன்வைக்கிறார்கள். ஈராக்கில் காயடிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட கறுப்பின அடிமைகளின் கதை சொல்லும் குடியிருப்புகள் இன்று அமெரிக்க படை அங்கே சென்ற பின்பே உலகின் கவனத்திற்கு வருகின்றன. சவுதியின் கறுப்பினத்தவர்களைப் பற்றி, அவர்கள் மீது அங்கே நிலவும் ஒடுக்குமுறை பற்றி, சூடானில் அழித்தொழிக்கப்பட்ட மில்லியன் கணக்கிலான கறுப்பினத்தவர் பற்றி இன்றும் இஸ்லாமிய சமூகம் கவனிப்பது கிடையாது.

இங்கே கிளப்பப் படும் பிராம்மண வெறுப்பியல் என்பது இடைப்பட்ட சாதியினருக்கு தரும் பாதுகாப்பை, வசதியை, உப்பரிகையைப் போலவே அங்கும் இந்த பிறமத/பிற சமூக வெறுப்பு உயர் சமூகத்திற்கும், அந்த உயர்சமூகத்தை எட்ட முயலும் இடைப்பட்ட சமூகத்திற்கும் வசதியைத் தருகிறது. வசதி வரும்போது அது நபியின் சுன்னாஹ்வை பின்பற்றுவதால் கிடைக்கும் வளப்பேறாக அங்கே கருதப்படுகிறது. இங்கேயோ நாங்களிங்கே 'பெரியார் இல்லையென்றால் நாமெல்லாம் ஆடு மேய்த்துக் கொண்டிருப்போம்' என்று எதோ பக்கத்தில் கேரளாவில், கர்னாடகாவில், ஆந்திராவில் இடைப்பட்ட சாதிகள் எல்லாம் பிராம்மண சேவகம் செய்து கொண்டிருப்பது போன்ற கற்பனையில் உழன்று கொண்டிருக்கிறோம். பெரியார் துதி என்பது நபி புகழ்சி போன்ற ஒரு மத அந்தஸ்தை பெற்றுவிட்டது நம்மிடையே.

***

இஸ்லாமிய ஆய்வு என்பது எனது பல பார்வைகளை மாற்றியிருக்கிறது. எல்லா வகையிலும் நான் மாறிவிட்டதாக, மேம்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை. சில சமயங்களில் இஸ்லாத்தைப் பற்றி நான் சொல்லும் அதே குற்றச்சாட்டை நானும் செய்கிறேன் என்று கூட தோன்றும். சிற்சில சமயங்களில் வாழ்வே பல படிநிலைகளில் இஸ்லாமாகக் கூட தென்படுவதும் உண்டு. அப்படிநிலையில் மேலே இருப்பது இஸ்லாம், அவ்வளவே.

ஆனால், மாற்றங்களை முழுமையாகக் கொண்டு வரவில்லை என்றாலும் கூட அடிமனதில் நெருடலை, பார்வையில் ஒரு புதிய கோணத்தை, புரிந்துணர்வில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதில் ஒரு முக்கியமான மாற்றம் இந்த பிராம்மண சாதி பற்றிய பார்வை. இந்த வெறுப்பியலைப் பற்றி, கருத்தியலைப் பற்றி கொஞ்சமாவது எழுதுவதன் மூலம் நான் எனது குற்றவுணர்வை குறைத்துக் கொள்ள முயல்கிறேன். இதைச் செய்யாமல், 'இஸ்லாமிய சமூகத்தினுள் இருக்கும் பெரும்பான்மையோர் காபிர்களுக்கு எதிரான வெறுப்பியலை மசூதியினுள், தமது சமூகத்தினுள் எதிர்க்கவில்லை, தமக்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக அமைதி காக்கின்றனர்' என்ற எனது குற்றச்சாட்டுக்கு தார்மீக நியாயத்தை எனக்குள்ளாகவே கற்பித்துக் கொள்ளவும் முயல்கிறேன். இஸ்லாமிய சமூகத்தின் வசதி, சவுகரியம் என்பது காபிரின அழிப்பின் மீது கட்டமைக்கப் பட்டிருப்பதைப் போலவே நானும், நான் சார்ந்த சமூகமும் அடித்தள மக்களின் உழைப்பையும், வேறு எவருக்கோ கிட்டவேண்டிய கனிகளை சூழ்ச்சியால், வன்முறையால் பறித்துக் கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. இதிலிருந்து வெளிவர முடியவில்லை, அது சாத்தியமில்லை, அதற்கான தைரியம் எனக்கில்லை என்பது புரிந்திருந்தாலும், இந்த புரிதலை ஏற்படுத்தியதற்காகவாவது இந்த இஸ்லாமிய ஆய்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்.


நேசகுமார்

http://nesakumar.blogspot.com



Thinnai.com 26th June,2009

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 8

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 8

நேசகுமார்


வஹ்ஹாபி சொன்னதில் சில உண்மைகள், சில தவறுகள், பல குழப்பங்கள் உள்ளன. அதை சுட்டிக் காட்டுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

1. அடிமைப் பெண்கள் விஷயமாக சுன்னாஹ்(முஹம்மதின் நடத்தை) எப்படி இருந்தது என்று ரஹிக்குல் மக்தூம் விவரிக்கின்றது(முஹம்மதின் வாழ்க்கையை சொல்லும், சவுதி அரசின் அங்கீகாரம் பெற்ற நூல் இது), இவ்வாறு

குறிப்பிடுகிறது:

A few elements of the enemy embraced Islam and their lives, wealth and children were spared. As for the spoils of the war, the Prophet (Peace be upon him) divided them, after putting a fifth aside, in accordance with Allâh’s injunctions. Three shares went to the horseman and one to the infantry fighter. Women captives were sent to Najd to be bartered with horses and weaponry. For himself, the Prophet (Peace be upon him) selected Rehana bint Amr bin Khanaqah, manumitted and married her in the year 6 Hijri. She died shortly after the farewell pilgrimage and was buried in Al-Baqi..(பக்கம் 145, INVADING BANU QURAIZA, Ar-Raheeq Al-Makhtum )

2. இன்று ஜிஹாத் நடைபெறும் இடங்களில் எல்லாம் இந்த பெண்களை ஏலத்தில் விடுதல் நிகழ்கிறது. சூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இருக்கும் அடிமைச்சந்தைகளை இணையத்தில் தேடினால் காணலாம். ஏனெனில், இது சுன்னாஹ்! இது சம்பந்தமான ஒரு நல்ல கட்டுரையை சுட்டிக் காட்ட விழைகின்றேன்:

http://frontpagemag.com/readArticle.aspx?ARTID=28953

இந்த கட்டுரை, இதற்குப் பின்னால் இருக்கும் மதக்காரணங்களை எளிதாக விளக்குகின்றது.

3. மிகவும் நாகரிகமாக, வஹ்ஹாபி உரிமையாளன் என்று எழுதுகிறார், நமது அங்கீகாரத்திற்காக. ஆனால், அடிமைகளின் உரிமையாளர் நடந்து கொள்வதுபோல ஒரு கணவன் நடந்து கொள்வாரா, அதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா என்று அவர் தாம் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், அடிமைகளின் உரிமையாளர் அவர்களிடம் உடலுறவு கொள்வதற்கு அனுமதி கோரத்தேவையில்லை, உலகிற்கு அந்த உறவை அறிவிக்கவும் தேவையில்லை என்பதே சுன்னாஹ்.

4. சபிய்யா விஷயத்தில், என்ன நிகழ்ந்தது என்பதை சொல்லும் ஒரு ஹதீதை வஹ்ஹாபியின் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.

Volume 7, Book 62, Number 89:

Narrated Anas:

The Prophet stayed for three days at a place between Khaibar and Medina, and there he consummated his marriage with Safiyya bint Huyay. I invited the Muslims to a banquet which included neither meat nor bread. The Prophet ordered for the leather dining sheets to be spread, and then dates, dried yogurt and butter were provided over it, and that was the Walima (banquet) of the Prophet. The Muslims asked whether Safiyya would be considered as his wife or as a slave girl of what his right hands possessed.

முஹம்மது சஃபியாவை அடிமையாக வைத்துக் கொள்கிறாரா அல்லது மனைவி எனும் அந்தஸ்தை கொடுக்கிறாரா என்பது அங்கே இருந்த யாருக்கும் தெரியாது. சஃபியாவை பர்தா போட்டு மூடியதைப் பார்த்தவுடன் தான் சஃபியா மனைவி எனும் அந்தஸ்தைப் பெறுவது கூட இருந்தவர்களுக்கு தெரிகிறது.

ஒரு பெண்ணின் கணவனை கொலை செய்துவிட்டு, அப்பெண்ணின் தந்தையை சித்தரவதை செய்துவிட்டு அப்பெண்ணை அடிமையாக படுக்கைக்கு அழைத்துச் சென்றதை 'பூ'வின் குணம், அது உலகிற்கு அழகிய எடுத்துக் காட்டு, அது இன்றும் முஸ்லீம்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுன்னாஹ் என்று சொல்வது எவ்வளவு கொடூரமானது?

5. வஹ்ஹாபி செய்துள்ள இன்னொரு விஷயம், வெறுமனே படுக்கைக்கு எடுத்துச் சென்றதை 'மணம்' என்று எழுதி, அதை திருமணத்துடன் சேர்த்து குழப்பி வாசகர்களை குழப்புவது. முஹம்மது முறையாக சஃபியாவை (வஹ்ஹாபி சொல்லியிருப்பது போல ஒரு இஸ்லாமிய நிக்காஹ்வுக்கான விதிமுறைகளுடன்) மணக்கவில்லை. அதுபோலவே ஜைனப், மரியம் மற்றும் பல பெண்களையும் மணம் புரியவில்லை.

ஜைனப் விஷயத்தில், அந்த திருமணம் வானுலகில் நடைபெற்றுவிட்டது என்று குரான் வசனம் இறங்கிவிட்டது. மரியம் விஷயத்தில் இன்னும் இஸ்லாமிய அறிஞர்களிடையே கூட ஒருமித்த கருத்து இல்லை, அவர் மனைவியா அடிமையா, வேலைக்காரப் பெண்ணா என்று. ஆனால், அந்த மரியத்துடன் முஹம்மது உறவு கொண்டது ஹதீதில் பதிவாகி இருக்கிறது. அப்படி உடலுறவு கொண்டது இன்னொரு மனைவி ஹஃப்சாவின் அறையில். அந்த உறவுக்கு பிறந்த குழந்தையின் காரணமாகவே மரியத்துக்கு மரியாதை தரப்பட்டது. அது கூட கலீஃபா உமர் மரியத்தின் மரணத்திற்கு மரியாதை தந்தார், அதனாலேயே கொஞ்சம் மரியாதை.

இல்லையென்றால், இஸ்லாம் காட்டிய வழி இதுவே, அடிமைகளுக்கும் பணியாளர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்களுடன் வல்லுறவில் ஈடுபடலாம், அவர்கள் பொருட்களைப் போன்றவர்கள். இஸ்லாம் காட்டிய வழி என்று சொல்லும்போது நான் வஹ்ஹாபியின் மொழி நடையைப் பின்பற்றுகிறேன் அவ்வளவே. காரணம், இஸ்லாம் என்று ஒன்றுமில்லை. முஹம்மது காட்டிய வழி. முஹம்மது செய்த செயல்கள் எல்லாம் மதமாக, கடவுளின் சட்டமாக, கடவுள் உலகிற்கு எடுத்துக்காட்டிய நடத்தைகளாக இவர்களால் கருதப்படுகின்றது.

முஹம்மது மட்டுமல்ல, சரியாக வழிநடத்தப்பட்ட கலீஃபாக்கள் என்ற கருத்தியலின் காரணமாக முஹம்மதுவுக்குப் பின்பு வந்த நான்கு கலீஃபாக்களும் செய்ததெல்லாம் கடவுள் ஆமோதித்த செயல்களாகின்றன. இதில் ஷியாக்கள் சில கலீஃபாக்களை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், அவர்களது இஸ்லாம் வேறு மாதிரி இருக்கிறது, சுன்னிகளின் இஸ்லாம் வேறு மாதிரி இருக்கின்றது.

உதாரணமாக, வஹ்ஹாபி சொன்ன அக்காளும் தங்கையுமாக அடிமைகளை பிடித்து வைத்து புணரமுடியாது என்று சொன்ன 'இஸ்லாமிய கோட்பாடு' முஹம்மது மரியத்தின் சகோதரியை இன்னொரு தோழருக்கு அனுப்பி வைத்ததால் ஏற்பட்டது. தாயையும், மகளையும் சேர்த்து பிடித்து வைத்து புணர முடியாது என்ற சொன்ன 'கடவுளின் வழிகாட்டுதல்' கலீஃபா உமரின் காலத்தில் ஏற்பட்டது.

6. முஹம்மது செய்தது தவறா?

முஹம்மது செய்தது தவறோ சரியோ, இன்றைக்கு அவர் செய்ததெல்லாம் இஸ்லாம் என்று இவர்கள் சொல்வதால், இன்றைய சூழலை கருத்தில் கொண்டே முஹம்மதின் நடத்தையை எடை போட வேண்டும். இன்று ஒரு போலிச்சாமியார் இது போன்று நடந்து கொண்டால் என்ன ஆகும்? அதை எப்படி பிறர் சகித்துக் கொள்வார்கள்? அந்த நிலைப்பாட்டையே நாகரிக சமுதாயம் இந்த தாலிபான்களை/ஜிஹாதிகளை நோக்கி எடுக்கிறது.

முஹம்மது அரசர் கிடையாது. அவர் போர் புரியவில்லை, அவர் ஜிஹாது செய்தார். அந்த ஜிஹாதில் அந்தக் கால போர் தர்மங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படவில்லை. குரானின் போதனைகள் அப்போதைய தர்மங்களை நிராகரித்து சூழ்ச்சியின் மூலமாக அப்பாவி பாகன் அரபிகளை அடிமைப் படுத்தியது. எனவே போர் தர்மம், அரசர் இப்படித்தான் நடந்து கொள்வார் என்றெல்லாம் சொல்லி, என்றைக்குமான கடவுளின் சட்டமாக இன்று வஹ்ஹாபிகள் முன்வைக்கும் இந்த அடிப்படைவாத மதக்கோட்பாடுகளை நியாயப்படுத்தக் கூடாது.

நேசகுமார்


http://www.thinnai.com/?module=displaystory&story_id=20907025&format=html


Thinnai.com 3rd July,2009